About Us
Home > About Us
தல வரலாறு
இவ் ஆலயம் தோன்றியமைக்கான காரணத்தை நோக்குவோமானால் முன்னொரு காலத்தில் இலவல்லி நாச்சியார் என்ற பெண் ஒருவர் நாகதோஷத்தினால் பீடிக்கப்பட்டு நீண்ட காலமாக குழந்தைப்பேறின்றி இருந்தார். இக் கன்னிகையானவர் பிருகு முனிவரிடம் சென்று இதிலிருந்து மீள்வதற்கு உபாயத்தை வேண்டி நின்றார். அதற்கு பிருகு முனிவர் சிவனை நோக்கி தவம் செய்யுமாறு கூறினார். அக் கன்னிகையும் சிவனை நோக்கி தவம் இருந்தார். தவத்தால் மகிழ்ந்த சிவன் இலவல்லி நாச்சியாரின் முன் தோன்றி உனக்கு திருமாலே குழந்தை வடிவாகக் காட்சி தந்து புத்திர பாக்கிய குறைபாட்டை நீக்கி அருளுவார் எனக்கூறி மறைந்தார்.
இவ்வாறு இருக்க ஒரு நாள் மாலை வேளையிலே கற்கோவளக் கடற்கரையில் ஒரு தங்க மீனானது மீனவர்கள் வலையில் சிக்குவதும் வலையை அறுத்துக் கொண்டு கடலிலே குதிப்பதமாக லீலை செய்து வந்தது. இது அங்குள்ள மக்கள் அனைவருக்கும் தெரிய வந்தது. இலவல்லி நாச்சியாரும் இந்தச் சம்பவத்தை அறிந்து அம் மீனைக் காண்பதற்காக கற்கோவள கடற்கரையின் அருகில் வந்து அமர்ந்து இருந்த வேளையில் அம் மீனானது இலவல்லி நாச்சியாரின் மடியிலே துள்ளி ஒரு குழந்தையாக மாறியது. சுற்றி நின்ற மக்கள் பரவச நிலை எய்தினர். இலவல்லி நாச்சியாரின் கருத்திற்கேற்ப அங்குள்ள அனைவரும் அக்குழந்தையை பல்லக்கில் ஏற்றி ஊருக்கு கொண்டு சென்றிருக்கும்போது வழியில் தாகசாந்திக்கு என அப்பல்லக்கை இறக்கி வைத்து விட்டு நீரருந்தி முடிந்ததும் அப்பல்லக்கை தூக்க முயற்சி செய்தனர். ஆனால் முடியவில்லை. அக் குழந்தையானது சிறீ சக்கரமாக மாறி அவ்விடத்திலேயே நிலையாய் இருந்து விட்டது. அவ்விடமே தற்போது கோயில் கொண்ட சிறீ வல்லிபுர ஆழ்வார் திருக்கோயில் ஆகும். இவ் ஆலயமானது ஆரம்பத்தில் குடிசையாகவே அமைத்து பூஜைகள் இடம் பெற்று வந்தது. படிப்படியாக கல்லால் ஆன கருவறை , மண்டபங்கள் என புனரமைக்கப்பட்டு இன்று காண்போர் வியக்கும் வண்ணம் மூன்று மிகப்பெரிய இராஜகோபுரம் , மூன்று பெரும் வீதிகளுடன் மூர்த்தி , தலம் , தீர்த்தம் கொண்ட நித்திய ஆறுகால பூஜை நடைபெறுகின்ற சிறப்பினை உடைய ஆலயமாக இது விளங்குகின்றது.
ஆலயச் சிறப்பு
மூர்த்தி – விஷ்ணுவின் சிறீ சுதர்சன சக்கரம்
தீர்த்தம் – வங்கக் கடலின் கற்கோவள பகுதி
வழிபட்டோர் – தேவர் , முனிவர் , இலவல்லி நாச்சியார் , சித்தர் , சின்னரர் , கௌஸியர் , மானிடர்
மூர்த்தி , தலம் , தீர்த்தம் ஆகியன ஒருங்கே அமையப்பெற்று விளங்குகின்ற இவ் ஆலயத்தின் தொன்மை பற்றி வடமொழியில் தோற்றம் பெற்ற ஸ்கந்த புராணத்தை தழுவி படைக்கப்பட்ட தட்சண கைலாய மான்மியத்தின் ஒரு அத்தியாயமான வல்லிபுர வைபவத்தில் குறிப்பிடப்பட்டுள்ளமை சிறப்புக்குரியதாகும். வல்லிபுரம் என்ற ஸ்தலத்தின் மகிமையை சிறீசூதமுனிவர் கூறியிருக்கின்றமை சிறப்பிற்குரியதாகும்.
1936ம் ஆண்டு கண்டெடுக்கப்பட்ட வல்லிபுர பொன்னேட்டுச்ஸசாசனம் வாயிலாகவும் இவ் ஆலய மகிமை வெளிப்படுகிறது. மேலும் இங்கே தேவர் , முனிவர் , சித்தர் , சின்னரர் , கவுசிகர் , மானிடர் போன்றோர் வழிபட்டு வேண்டியவர்க்கு வேண்டியாங்கு அடையப் பெற்றனர் என இதிகாசம் குறிப்பிடுகின்றமை இவ் ஆலயச் சிறப்பே ஆகும். “ சிங்கை நகர் “ காலத்தில் அரச பரம்பரையால் பேணப்பட்ட சிறப்பு வாய்ந்தது. விஷ்ணுவின் வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தைச் சூழ அன்னதான மடங்கள் பணிசெய்து பசித்து வந்தவர்க்கு பசி தீர்க்கும் இடமாக விளங்குகின்ற சிறப்புக்குரியது. புராதன மக்களிடையே நாகதம்பிரான் வழிபாடு சிறப்புப் பெற்றிருந்தது. இவ் ஆலயத்தில் விஷ்ணுவுடன் நாகதம்பிரானும் வீற்றிருந்து அருள் பாலிக்கும் சிறப்புடைய தலம். இச் சக்கரமானது ஆண்டுதோறும் தீர்த்தமாட வங்கக் கடலுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றமை சிறப்புக்குரியது. சிவனும் திருமாலும் ஒருவரே என்ற உண்மையை உலகிற்கு எடுத்துக் காட்டும் ஆலயமாக இவ் வல்லிபுர ஆழ்வார் ஆலயம் விளங்குகிறது. இவ் ஆலயத்தில் வேறெங்கும் காணாத வகையில் விபூதியும் , நாமமும் பிரசாதமாக வழங்கப்படுகின்ற சிறப்புக்குரியது. நித்திய ஆறுகாலப் பூஜை இடம்பெறும் ஆலயமாக இது விளங்குகின்றது.